ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் அடுத்த சபர்மதி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த சபர்மதி-ஆக்ரா அதிவிரைவு பயணிகள் ரயில், அஜ்மீர் அருகே சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. முதற்கட்ட தகவலின் படி சில பயணிகள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சபர்மதி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு வாரத்திற்கு 4 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில், சபர்மதியில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.15 மணிக்கு ஆக்ரா சென்றடைகிறது. அந்தவகையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை புறப்பட்ட இந்த ரயில், அஜ்மீர் அடுத்த மதார் ரயில் நிலையம் அருகே இன்று (திங்கள்கிழமை) நள்ளிரவு 1.04 மணிக்கு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ரயிலின் எஞ்ஜின் உட்பட நான்கு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேலும், இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சிலர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் வட மேற்கு ரயில்வே துறை உயரி அதிகாரி விபத்து குறித்து X சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.