கொல்லம்:சேலத்தில் இருந்து சபரிமலை சென்றவர்கள் பேருந்து விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த நிலையில் 16 பேர் காயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இருந்து சபரி மலைக்கு சுமார் 30 பேர் பேருந்து மூலம் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று அந்த பேருந்து கொல்லம் ஆரியங்காவு என்ற இடத்திற்கு வந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. உடனே உள்ளூர் போலீசார் மற்றும் பொது மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர்.
இந்த விபத்தில், 16 பேர் காயமடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உயிரிழந்தவர் சேலத்தைச் சேர்ந்த தனபால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போது, காயமடைந்தவர்கள் புனலூர் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயம் அடைந்தவர்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இந்த விபத்தில் சிக்கிய 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலத்தில் இருந்து 30 பேருடன் சென்ற பேருந்து கேரளாவில் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்து 16 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.