பிதர்: கர்நாடக மாநிலம் பிதர் நகரின் சிவாஜி சவுக்கில் எஸ்பிஐ ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மைய இயந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காக அதற்கான பாதுகாப்பு வாகனத்தில் ஊழியர்கள் இன்று காலை 10.30 மணியளவில் வந்துள்ளனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், பாதுகாப்பு ஊழியர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மொத்தம் ஆறு ரவுண்டு சுட்டதில் பாதுகாப்பு ஊழியர்கள் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் வாகனத்தில் இருந்த பணப் பெட்டியை தூக்கிக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர். அந்த பெட்டியில் 93 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் காவலாளரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
துப்பாக்கி சூடு
பட்டப்பகலில், பொதுமக்கள் மத்தியில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி திடுக்கிட வைத்துள்ளது. அதில், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் இருவரும் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காக பணப்பெட்டியை ஊழியர்கள் வெளியில் எடுத்து வரும் வரைக்கும் காத்திருக்கின்றனர். பின்னர் ஊழியர்கள் வாகனத்தின் கதவை திறந்து பெட்டியை எடுத்து வரும்போது திடீரென வந்த மரம் நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் காவலாளி ஒருவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழ, எஞ்சியவர்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். பின்னர் கொள்ளையர்களில் ஒருவர் பைக்கை எடுக்க, மற்றொருவர் பணப்பெட்டியை தூக்க முடியாமல் தூக்கிய போது பாரம் தாங்காமல் பெட்டியுடன் கீழே விழுவதும், பின்னர் இருவரும் சேர்ந்து பணத்தை அள்ளிப்போட்டு அந்த பெட்டியை பெட்ரோல் டேங்க் மீது வைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி செல்வதும் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.