ஹைதராபாத்: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - என்சி கூட்டணி 48 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாஜக 29 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதேபோல், ஹரியானாவில் மாலை 6.30 மணி நிலவரப்படி பாஜக 45 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இருகட்சிகளிடையே 5 தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில், இரு மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி, தோல்வியை சந்தித்த நட்சத்திர வேட்பாளர்கள் குறித்த தகவலை இங்கு காண்போம்:
ஹரியாணாவில் பாஜக முதல்வர் வேட்பாளர் நயாப் சிங் சைனி, காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாஜகவிலிருந்து விலகி, சுயேட்சையாக போட்டியிட்ட சாவித்ரி ஜிண்டால் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில் முன்னாள் துணை பிரதமர் சவுத்ரி லால் குடும்பத்தைச் சேர்ந்தவரும், ஜனநாயக் ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, உச்சன காலன் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் 7950 வாக்குகள் மட்டுமே பெற்று5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அத்தொகுதியில் பாஜகவின் தேவேந்திர சதர் புஜ் அத்திரி 48968 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதேபோல் ஜம்மு - காஷ்மீரில் நட்சத்திர வேட்பாளர்களான தேசிய மாநாட்டுக் கட்சியின் (என்சி) தலைவர் ஒமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.ஒய்.தாரிகாமி, ஆம் ஆத்மி கட்சியின் மெஹ்ராஜ் மாலிக் ஆகியோர் வெற்றிக்கனியை சுவைத்துள்ளனர். அதேநேரத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி, அம்மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
2001 நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல் குருவின் சகோதரர் ஐஜாஸ் அகமது குரு, வடக்கு காஷ்மீரில் உள்ள சோபோர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெறும் 129 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார்.
இரு மாநிலங்களிலும் வெற்றி, தோல்வியை கண்ட நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு: