டெல்லி:நாடு முழுவதும் 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி கடமைப் பாதையில் நடந்த குடியரசு தின விழாவில் இந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக ஜனாதிபதி வருகையின் போது அவருக்கு 105 மி.மி இந்தியன் ஃபில்ட் கன் 21 குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்பட்டது. இந்த குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், இந்த ஆண்டு சிறப்பு விருந்தினரான பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
75வது குடியரசு தின விழா விக்சித் பாரத் (Viksit Bharat) பாரத்: லோக்தந்த்ரா கி மாத்ருகா (Bharat: Loktantra ki Matruka) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. கடமைப் பாதையில் நடைபெற்ற அணிவகுப்பில் முப்படைகளைச் சேர்ந்த வீராங்கனைகள் அணிவகுப்பு கம்பீரமாக நடைபெற்றது. மேலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்த்திகளின் கண்கவர் அணிவகுப்பும் நடைபெற்றது.
மேலும் இந்த அணிவகுப்பு நிகழ்வில் பிரான்ஸ் வீரர்கள் 95 பேரும், பிரான்ஸ் இசைக்குழுவினர் 33 பேரும் கலந்து கொண்டனர். முன்னதாக பிரான்ஸ் பாஸ்டில் டே கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கிடையிலான உறவைப் போற்றும் வகையில் இந்தியக் குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டதன் மூலம் இந்தியக் குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட 6வது பிரான்ஸ் அதிபர் ஆனார்.
மேலும், 75வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்தியாவிற்கு நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், தூதரகங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “எத்தனை அழுத்தங்கள் இருந்த போதிலும் இந்தியாவும் பிரதமர் மோடியும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள். இந்தியாவும் ரஷ்யாவும் தங்கள் உறவைப் பலப்படுத்தும் வகையில் வேகமாக முன்னேற்றி வருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அவரது X சமூக வலைத்தள பக்கத்தில், “2030ஆம் ஆண்டுக்குள் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் பிரான்ஸில் கல்வி கற்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இந்த லட்சிய இலக்கை சாதித்துக் காட்ட உறுதியாக இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்திய மாணவர்கள் பிரான்சில் படிப்பதை எளிதாக்கும் வகையில் சர்வதேச வகுப்புகளை உருவாக்க உள்ளதாகவும், இந்தியாவில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு விசா நடவடிக்கையை எளிமைப்படுத்த உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.