லிஜயவாடா:ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஊடக வித்தகருமான மறைந்த ராமோஜி ராவுக்கு ஆந்திர மாநில அரசின் சார்பில் இன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயவாடாவில் உள்ள அனுமோலு கார்டன்சில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மூத்த பத்திரிகையாளர் என்.ராம், திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ராமோஜி ராவின் மகனும், ஈநாடு ஊடக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான செருகுரி கிரண் ராவ் பேசும்போது, "இந்த மாநிலத்தை கட்டமைப்பதில் ராமோஜி ராவுக்கு இருந்த தொலைநோக்குப் பார்வையைத் தொடரும் விதமாக, தலைநகர் அமராவதி கட்டமைப்புக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக 10 கோடி ரூபாய்க்கான காசோலையை அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்" என்று கூறினார்.
"அமராவதியை ஆந்திர மாநில புதிய தலைநகரின் பெயராக முதன்முதலில் பரிந்துரைத்தவர் ராமோஜி ராவ் தான்," என்று விழா மேடையில் பெருமிதத்துடன் கூறினார் கிரண் ராவ். "பொது வாழ்வில் நன்மதிப்பைக் கட்டிக்காக்கவும், எளிய மக்களின் நல்வாழ்வுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ராமோஜி ராவ் போராடினார்" என்றும் கிரண் ராவ் கூறினார்.