ஹைதராபாத்:மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் மக்களுக்கு உதவும் நோக்கில், 5 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படுகிறது என்று ராமோஜி குழுமம் அறிவித்துள்ளது. 'ஈநாடு நிவாரண நிதி' மூலம் இந்த நிதி அளிக்கப்படுவதாகவும் ராமோஜி குழும நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், இந்த இரு மாநிலங்கள் கடும் சேதங்களை சந்தித்துள்ளன. குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்துக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு இத்துயரமான நேரத்தில் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து உதவிக்கரம் நீட்டுவது நமது கடமையாகும்.
இதனை கருத்தில் கொண்டு, உடனடி மீட்புப் பணிகளுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களின் நீண்டகால மறுவாழ்வுக்காகவும் 'ஈநாடு நிவாரண நிதி' மூலம் 5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்று ராமோஜி குழுமம் தெரிவித்துள்ளது.
மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இந்நிவாரண உதவி சென்றடைவதை உறுதி செய்வதில் தாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும், இக்கட்டான சூழலில் தவித்துவரும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இந்த நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் குழும நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மனிதாபிமான முயற்சியில் தங்களுடன் கைகோர்க்குமாறு தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ராமோஜி குழுமம் அழைப்பு விடுத்துள்ளது. ஈநாடு நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை அளிக்க விரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்கிற்கு நிதியை அனுப்பலாம்.