புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) உடல்நல குறைவால் இன்று (செப்., 12) காலமானார். சுவாச தொற்று பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி, சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு ஆபத்தான நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சீதாராம் யெச்சூரியின் உடல் கற்பித்தல், ஆராய்ச்சி நோக்கத்துக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது
இந்நிலையில், சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி:பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், ''சீதாராம் யெச்சூரியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் இடதுசாரிகளின் முன்னணி வெளிச்சமாக இருந்தார். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தவர். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்'' என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், ''இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
சீதாராம் யெச்சூரி அச்சமற்ற தலைவராக இருந்தவர், சிறு வயதிலிருந்தே, மாணவர் தலைவராக தைரியமாக எமெர்ஜென்சிக்கு எதிராக நின்று, நீதிக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். தொழிலாளி வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்கள் ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளித்தது'' என தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி:மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எக்ஸ் தள பதிவில், ''சீதாராம் யெச்சூரி காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறேன். மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரை நான் அறிவேன். அவருடைய மறைவு தேசிய அரசியலுக்கு இழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
ராகுல் காந்தி: காங்கிரஸ் எம்பி- யும், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் எக்ஸ் தள பக்கத்தில், '' சீதாராம் யெச்சூரி எனது நண்பர். நமது நாட்டைப் பற்றிய ஆழமான புரிதலை கொண்டிருந்தார். இந்தியாவின் சித்தாந்தங்களை பாதுகாப்பதிலும் அக்கறை கொண்டிருந்தார். எங்களுக்குள் நீண்ட காலமாக நடந்து வந்த விவாதங்களை நான் தற்போது இழக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
டி. ராஜா:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி. ராஜா கூறுகையில், ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் இடதுசாரி இயக்கத்திற்கும் பெரிய இழப்பு. பல தசாப்தங்களாக நாங்கள் பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றாக பணியாற்றியுள்ளோம். பின்னர் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆனேன்'' என்றார்.
இதையும் படிங்க:நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த ஸ்ருதி.. கடைசி துணையாக இருந்த காதலனும் விபத்தில் பலி..