டெல்லி : நாடு முழுவது மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரலி மற்றும் அமேதி தொகுதிகளை மட்டும் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் சஸ்பென்சாக வைத்து உள்ளன.
இந்நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தியே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமேதி தொகுதியில் மீண்டும் ஸ்மிரிதி ராணி - ராகுல் காந்தி இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் பரவின.
அதேபோல் ரேபரலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என தகவல் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு காங்கிரஸ் கட்சி தரப்பில் நாளை (ஏப்.26) வெளியாகும் என தகவல் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து அறிவிப்பு வெளியானதும் இருவரும் அடுத்த வாரம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு கேரளா வயநாடு மற்றும் அமேதி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிரிதி ராணிக்கு மத்திய அமைச்சராக பதவி வழங்கப்பட்டது. இந்த முறையும் பாஜக சார்பில் ஸ்மிரிதி ராணி போட்டியிடுவார் என தெரிகிறது.
மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி 63 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் போட்டியிட உள்ளன. உத்தர பிரதேசத்தில் ஐந்தாவது கட்டமாக மே 20ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன் நாளை (ஏப்.26) கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
நாட்டில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. நாளை (ஏப்.26) இரண்டாவது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி பகுஜான் சமாஜ் கட்சி மத்திய பிரதேச மாநில பெடூல் தொகுதி வேட்பாளர் அசோக் பாலவி உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மே 7ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது கட்ட மக்களவை தேர்தலுடன் சேர்த்து பெடூல் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க :பீகாரில் ஆளுங்கட்சி தலைவர் சுட்டுக் கொலை! மக்களவை தேர்தலுக்கு முன் கொடூரம்? அரசியல் பகையா? - Bihar JDU Leader Shot Dead