ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத்தில் நிலவி வந்த சொத்து தகராறு நீதிமன்றம் வரைக்கும் சென்று விட்டது.
ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா. இவருக்கும், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அண்மைக் காலமாக அரசியல் ரீதியாக கருத்து மோதல் நிலவி வந்த நிலையில், தற்போது குடும்பத்திலும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது மனைவி பாரதி ரெட்டி இருவரும் ''சரஸ்வதி பவர் அண்டு இண்டஸ்ட்ரீஸ்'' நிறுவனத்தில் உள்ள தங்களது பங்குகளை, ஷர்மிளா சட்ட விரோதமாக தாய் விஜயம்மாவுக்கு மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஷர்மிளா தனது கவுரவத்தையும், கண்ணியத்தையும் கெடுத்துவிட்டார், எனவே இனி எங்களுக்குள் எந்த அன்பும் இல்லை எனக்கூறி, ஷர்மிளாவுக்கு பரிசாக வழங்கியிருந்த பத்திரத்தையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஹைதராபாத் கிளையில் ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனக்கும், ஷர்மிளாவுக்கும் இடையே உள்ள அன்பின் ஒரு பகுதியாக நான் எனது சொத்துக்களை ஷர்மிளாவுக்கும் வழங்க முடிவு செய்து, ஆகஸ்ட் 31, 2019 அன்று ஒப்பந்தமும் செய்துள்ளோம்.
ஆனால், அண்மைக் காலமாக ஷர்மிளா தன் மீது அரசியல் மற்றும் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்து தனது கவுரவத்தை கெடுத்துவிட்டார். அவருக்கு என் மீது எந்த அன்பும் கிடையாது. இதனால், நான் அவருக்கு அளித்திருந்த பரிசு பத்திரத்தை திரும்பப்பெற நினைத்த வேளையில், சரஸ்வதி பவர் அண்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் உள்ள எங்களது பங்குகளை ஷர்மிளா சட்டவிரோதமாக தாய் விஜயம்மா பெயரில் மாற்றியுள்ளார்.
இதையும் படிங்க:மது விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை - நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு!
சரஸ்வதி நிறுவனத்தில் எனக்குச் சொந்தமான சந்தூர் நிறுவனத்தின் 46,71,707 பங்குகளும், மனைவி பாரதி ரெட்டியின் 71.50 லட்சம் பங்குகளும் விஜயம்மாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்காலிகமாக தாய் மீது இந்த பங்குகளை மாற்றி, வருங்காலத்தில் அவற்றை ஷர்மிளா தனது பெயரில் மாற்றி அபகரிக்க நினைக்கிறார்.
இந்த செயல்முறைக்கு ஒப்புதல் அளித்து, சரஸ்வதி வாரியம் ஜூலை 6ஆம் தேதி எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது. எனவே, இந்த பங்கு மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஹைதராபாத் கிளையில் இந்த மனு குறித்த விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்