டெல்லி:குடியரசு தலைவர் மாளிகையான் ராஷ்டிரபதி பவனில் இரண்டாம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்று பத்ம விருதுகளை வழங்கினர். இந்த விழாவில் மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக இந்த விழாவில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து கலைப் பிரிவில் தெலங்கு நடிகர் சீரஞ்சிவிக்கு பத்ம விபூஷன் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். அந்தமான் நிகோபார் தீவுகளை சேர்ந்த பெண் விவசாயி கே செல்லமாளுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கவுரவித்தார். மேலும், நடிகை வைஜெயந்திமாலா உள்ளிட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
மத்திய அரசால் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு தரப்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களின் பெயர்க விருதுக்காக பரிந்துரைக்கப்படுகின்றன.