பிலிபித்(உபி): பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் காவல்துறை சோதனை சாவடி மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் தொடர்புடைய மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகள் உபி, பஞ்சாப் மாநில போலீசாரின் கூட்டு நடவடிக்கையில் பிலிபித் பகுதியில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து பஞ்சாப் மாநில காவல்துறை தலைவர் கவுரவ் யாதவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்ட குருதாஸ்பூர் பகுதியை சேர்ந்த காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த குர்வீந்தர் சிங், வீரேந்திர சிங் என்ற ரவி, ஜஸ்ப்ரீத் சிங் என்ற பிரதாப் சிங் ஆகியோர் என தெரியவந்துள்ளது.
பஞ்சாப் எல்லை ஓரப்பகுதிகளில் காவல்துறை கட்டமைப்புகள் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது விசாரணையில் தெரியவந்தது. பிலிபித், பஞ்சாப் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் பிலிபித்தின் புரான்பூர் பகுதியில் இந்த என்கவுண்டர் நடந்தது. என்கவுண்டரில் கொல்லப்பட்ட மூவரும் குருதாஸ்பூர் காவல்துறை சோதனை சாவடி மீது தாக்குதல் நடத்தியதில் தொடர்புடையவர்கள் ஆவர்.
இந்த காலிஸ்தான் அமைப்பினர் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையையின் தலைவர் ரஞ்சித் சிங் நித்தா என்பவரால் கட்டுப்படுத்தப்படுகின்றனர். இவர்களை கிரேக்க நாட்டில் இருந்து இயக்குபவர் அக்வான் கிராமத்தை சேர்ந்த ஜஸ்வீந்தர் சிங் மனு என்பவராவார். பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய இங்கிலாந்தை சேர்ந்த ஜக்ஜீத் சிங் என்பவராலும் அவர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனர். ஜக்ஜீத் சிங் ஃபதே சிங் பாக்கியின் அடையாளத்தைப் பயன்படுத்தினார்.
சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அனைத்துத் தொடர்புகளையும் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. எனவே மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள். அதே போல சில பறிமுதல்களும் மேற்கொள்ளப்படும். இந்த மாநிலங்களுக்கு இடையேயான நடவடிக்கையில் ஒத்துழைப்பு அளித்த உபி காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
இரு மாநிலங்களுக்கு இடையேயான காவல்துறை ஒத்துழைப்புக்கு இந்த சம்பவம் மிக சிறந்த உதாரணமாகும். உபி, பஞ்சாப் போலீசார் இணைந்து பணியாற்றினர். தீவிரவாதிகள் குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. சதியாளர்களுக்கு எதிராக இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,"என்றார்.
இது குறித்து பேசிய பிலிபித் காவல்துறை கண்காணிப்பாளர் அவினாஷ் பாண்டே,"புரான்பூர் பகுதியில் நடந்த என்கவுண்டரில் மூவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.
குருதாஸ்பூர் காவல் சோதனை சாவடி மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியவர்கள் புரான்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக பஞ்சாப் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். எனவே அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினோம். மேலும் பதுங்கியிருந்த மூவரும் பைக் ஒன்றில் சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பிலிபித்-புரான்பூர் இடையே பாலத்தில் சென்று கொண்டிருந்த அவர்களை நிற்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், எங்கள் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் எங்களை நோக்கி சுட்டனர். எனவே பதிலுக்கு அவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டியதாயிற்று. அதில் மூவரும் காயம் அடைந்தனர்.
மூவர் பயன்படுத்திய திருடப்பட்ட இருசக்கர வாகனம், இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு துப்பாக்கிகள், பெரும் அளவிலான வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் இரண்டு காவலர்கள் காயம் அடைந்தனர்.அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,"என்றார்.