தாகா: இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும்படி வங்கதேசம் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசத்தில் வெடித்த மாணவர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 5 ஆம் தேதி (ஆகஸ்ட் 5) தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனால் அவரது 16 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு ஏற்பட்டது. இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
இதனிடையே, தாகாவில் உள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, பல்வேறு முன்னாள் அமைச்சர்கள், ஹசீனாவின் முன்னாள் ஆலோசகர்கள் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச வெளியுறவுத்துறை ஆலோசகர் தௌஹித் ஹொசைன்,"நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்வதற்காக ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய அரசுக்கு தூதரக ரீதியாக கடிதம் எழுதப்பட்டுள்ளது," என்று கூறியுள்ளார். முன்னதாக இது குறித்து பேசிய அந்நாட்டின் உள்துறை ஆலோசகர் ஜஹாங்கீர் ஆலம், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, திரும்ப அழைக்கும்படி வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே நாடு கடத்தல் ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனவே அதன்படி வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,"என்றார்.