ஹைதராபாத்: ’புஷ்பா 2’ சிறப்புக் காட்சியில் பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜூன் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியானது.
இதற்கு முன்னதாக புஷ்பா 2 சிறப்புக் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கத்தில் டிசம்பர் 4ஆம் தேதி இரவு திரையிடப்பட்டது. அப்போது ரசிகர்களுடன் படம் பார்க்க அல்லு அர்ஜூன் திரையரங்கிற்கு வந்தார். இந்நிலையில் திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (35) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜா (9) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
இதனைத்தொடர்ந்து பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா திரையரங்க உரிமையாளர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெண் உயிரிழந்த வழக்கில் நீதி கேட்டு, அடையாளம் தெரியாத நபர்கள் 6 பேர், அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். அவரது வீட்டின் மீது கல் எறிந்து, அல்லு அர்ஜூனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து 6 நபர்களை போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீன் வழங்கினர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், புஷ்பா 2 திரைப்பட தயாரிப்பாளர்கள் நவீன் ஏற்னேனி மற்றும் ரவி ஷங்கர் ஆகியோர் இறந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து நஷ்ட ஈடாக 50 லட்ச ரூபார் காசோலையை வழங்கினர். அப்போது தெலுங்கானா அமைச்சர் கோமாட்டி ரெட்டி வெங்கட் ரெட்டி உடனிருந்தார்.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் ஜொலிக்கும் மாரி செல்வராஜ்; புகைப்படம் வைரல்! - KEERTHY SURESH MARRIAGE
மேலும் இந்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் பூதாகரமாக வெடித்துள்ளது. பெண் உயிரிழந்த விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜூன் மீது குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் சிறப்புக் காட்சியில் பெண் உயிரிழந்த வழக்கில்அல்லு அர்ஜூன் இன்று (டிச.24) காலை விசாரணைக்காக சிக்கட்பல்லி காவல்நிலையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.