டெல்லி:டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் புதிதாக பிறந்த 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த தீ விபத்தின் கோரப்பிடியில் சிக்கி 7 பச்சிளம் குழந்தைகள் பலியாகிய சம்பவத்திற்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'டெல்லி விவேக் விஹாரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் பலியாகிய செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. இந்த அதிர்ச்சியைத் தாங்கும் சக்தியை இழந்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு இறைவன் தரவேண்டும். இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்ற குழந்தைகளும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'புதுதில்லியில் உள்ள மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளின் உயிர்கள் மிகவும் துயரத்தில் உள்ளன. துயரத்தின் இந்த நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்' என்று கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை நொறுக்கியுள்ளது. இந்த நம்பமுடியாத இக்கட்டான நேரத்தில் துயரமடைந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.