பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஆபாச வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியதாக பதியப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி ஹோலேநரசிபூர் எம்.எல்.ஏ, எச்.டி ரேவண்ணா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, நேற்று (மே.4) எச்.டி ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், ஆபாச வீடியோ வழக்கில் வெளிநாடு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா விரைவில் சரண்டைய உள்ளதாக மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.எஸ் புட்டராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சிறப்பு புலனாய்வு குழு எச்.டி ரேவண்ணாவை கைது செய்தது.
அவர் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவார் என்று தெரிவித்தார். மேலும், அவர் பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வர உள்ளதாகவும் ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு முன்னிலையில் அவர் சரணடைய உள்ளதாகவும் தெரிவித்தார். அதேநேரம் பிரஜ்வல் ரேவண்ணா எப்போது இந்தியா வருகிறார், எங்கு சரண்டையை உள்ளார் என்பது குறித்த எந்த தகவலையும் சி.எஸ் புட்டராஜூ வெளியிடவில்லை.