டெல்லி:பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜம் எம்பிக்கள், கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் விதிமுறைகளை பின்பற்றி, நாட்டுக்காக பணியாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற விவகாரங்களில் எம்பிக்கள் அனைவரும் முழுமையாக பங்கு பெறவும், வருகை பதிவேட்டை முறையாக பராமரித்தல் மற்றும் அவரவர் தொகுதிகள் தொடர்பான பிரச்சினைகளை குறித்து அவையில் குரல் எழுப்பி அதுகுறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை கடமையாக கொண்டு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி தங்களுக்கு முக்கியமான மந்திரத்தை வழங்கியதாக தெரிவித்தார். நாட்டுக்காக சேவையாற்ற அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்பிக்களும் நாட்டுக்காக சேவையாற்றுவதை முன்னுரிமையாக கொண்டு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியதாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் அனைத்து விவகாரங்களிலும் எம்பிக்கள் கலந்து கொண்டு தங்களின் தொகுதிக்கான பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் நீர், சுற்றுச்சூழல், சமூக செயல்பாடு குறித்த விவகாரங்களில் தங்களது கருத்துகளை நாடாளுமன்றத்தில் முன் வைக்க வேண்டும் என பிரதமர் கூறியதாக தெரிவித்தார்.