டெல்லி :மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் பிக்சிங் செய்யப் பார்க்கிறார் என்றும் ஒருவேளை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் அரசியலமைப்பு மாற்றப்பட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்றும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஜனநாயகத்தை காக்கும் பேரணியில் ராகுல் காந்தி தெரிவித்தார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் ஜனநாயகத்தை காக்கும் பேரணி என்ற தலைப்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெறுகிறது. இதில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை, நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காப்பற்ற வேண்டிய தேர்தல் என்றும் தெரிவித்தார்.
கிரிக்கெட்டில் நடுவர்கள் மற்றும் கேப்டன் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டு வீரர்களை விலைக்கு வாங்கினால் வெற்றி பெற முடியும், இதைத் தான் மேட்ச் பிக்சிங் என்றும் கூறுகிறோம். தற்போது எதிர்க்கட்சிகள் கூட்டணி முன் மக்களவை தேர்தல் உள்ளது, நடுவர்களை தேர்வு செய்தது யார் என்றும் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மேலும், மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டு வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என பாஜக முழக்கம் எழுப்பி வருவதாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்கள், மேட்ச் பிக்சிங், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது, ஊடகங்களை விலை வாங்க முடியாமல் பாஜகவால் 180 இடங்களை கூட தாண்ட முடியாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.