டெல்லி:தேர்வுகள், தேர்வினால் வரும் அழுத்தம், பயம் உள்ளிட்டவை குறித்து பரீஷா பே சார்ச்சா என்ற பெயரில் கடந்த ஆறு வருடங்களாக மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர்களிடம் பிரதமர் மோடி உரையாடி வருகிறார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல லட்சம் பள்ளி மாணவர்களிடம் மோடி கலந்துரையாடுகிறார்.
அந்த வகையில், பரீஷா பே சார்ச்சா நிகழ்ச்சி 7வது ஆண்டாக இன்று (ஜன.29) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தேர்வு நேரத்தில் ஏற்படும் பயம், மன அழுத்தம் உள்ளிட்டவைகளை எப்படி அணுகுவது, அவற்றை எப்படி எதிர்கொள்வது என மோடி அறிவுரைகளை வழங்கினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக கலந்து கொண்டு பிரதமர் மோடியுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றனர்.
மேலும், இந்நிகழ்ச்சி அனைவரும் பார்க்கும் வகையில் காணொளிக் காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. தேர்வு குறித்து பள்ளி மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் நேரடியாக பதிலளித்தார். அந்த வகையில், நாங்கள் கடுமையாக உழைக்கிறோம் என்பதை பெற்றோர்களுக்கு எப்படி நம்ப வைப்பது என புதுச்சேரி சேதராப்பட்டு, அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி தீபஸ்ரீ பிரதமர் மோடியிடம் கேள்வியை எழுப்பினார்.
புதுச்சேரி மாணவி கேட்ட கேள்விக்கு வணக்கம், வணக்கம் எனக் கூறி பதலளிக்க தொடங்கிய மோடி, இது பெற்றோரும் ஆசிரியரும் சிந்திக்க வேண்டிய விஷயம் எனவும் நீங்கள் செய்வதாக கூறிய விஷயத்தை செய்யாமல் தவற விட்டதால் நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்க கூடும். நீங்கள் சொன்னதை உண்மையான மனதோடு செய்திருந்தால் உங்கள் மேல் உள்ள நம்பிக்கை குறைவதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.