டெல்லி: தென் இந்தியாவில் உள்ள அரசுகளை கடுமையாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2019 தேர்தலை விட, 2024 மக்களவைத் தேர்தலில் தெற்கில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.
பாஜக உயர் சமூகத்தினருக்கான கட்சி என்ற குற்றச்சாட்டு குறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறிய பிரதமர் மோடி, “பாஜக உயர் சமூகத்தினருக்கான கட்சி என ஒரு பிம்பம் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் பாஜகவில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் பட்டியலின சமூகத்தினர், பட்டியலின பழங்குடியினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர். இன்றைய நிலையில், எனது கட்சியில் அதிகபட்சமாக கிராமத்தினரே உள்ளனர்.
பாஜக பழைய சிந்தனைகளை பின்பற்றும் கட்சி எனவும், புதிய சிந்தனைகளை உருவாக்குவது இல்லை என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், உலக அளவில் மிகப்பெரிய ஆக்கப்பூர்வமான டிஜிட்டல் இயக்கத்தை பாஜக வழிநடத்தி வருகிறது. எனவே, பாஜகவுக்கு எதிராக பரப்பப்படும் இந்த கருத்து தவறானது.
பாஜகவின் வாக்கு சதவீதம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “நீங்கள் தெலங்கானாவை எடுத்துக் கொண்டால், பாஜக வாக்கு சதவிதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கடந்த 2019இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தெற்கில் பாஜக தனிப் பெரும்பான்மை கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ளது.
பாஜக அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்த 2024 தேர்தலில் பாஜக வாக்கு சதவீதம் இதுவரை நடந்த தேர்தலை விட அதிகரிக்கும் என நம்புகிறேன்” என்றார். பிரதமர் மோடி கர்நாடகா, கேரளா போன்ற தென் மாநிலங்களில் பாஜக புறக்கணிப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, இடதுசாரி கட்சியாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, அனைத்து இடங்களிலும் அவர்கள் அடையாளம் என்ன? புதுச்சேரியில் பாஜக ஆட்சியில் உள்ளது.