தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இன்று முதல் கடலுக்கு மீண்டும் மீன் பிடிக்கச் சென்றனர்.
தூத்துக்குடி உள்ள விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 250 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். இந்தநிலையில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும், கேரள விசைப்படகு மீனவர்கள் தூத்துக்குடி கடல் எல்லைக்குள் இரவு, பகல் என அத்துமீறி நுழைந்து மீன் பிடித்து வருகின்றனர். அதனை நிறுத்த வேண்டும், 11 விசைப்படகு மற்றும் மீனவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை அதாவது ஜனவரி 27-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் விசைப்படகு உரிமையாளர்கள் ஆகியோர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர். இதன் காரணமாக மீன்பிடி தொழிலை நம்பி உள்ள சுமார் 17,000 தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சுமார் 8 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் விசைப்படகு உரிமையாளர்கள் ஆகியோர் இடையே மீண்டும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மொத்தமுள்ள 250 படகுகளில் 135 படகுகள் உடனடியாக கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
மேலும், வழக்கமாக இரவு நடைபெறும் மீன் ஏலம் நாளை முதல் காலை எட்டு மணிக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சனிக்கிழமை மட்டும் இரவு 8 மணிக்கு மீன்கள் ஏலம் நடத்தப்பட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.