புதுடெல்லி:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்த நாளை அதிமுகவினரும், அவரது ரசிகர்களும் இன்று கொண்டாடி வருகின்றனர். எம்ஜிஆரின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'எம்ஜிஆர் பிறந்த நாளில் நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும், சிறந்த சமுதாயத்தை கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் ஊக்கம் அடைந்துள்ளோம்.' என்று மோடி தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மோடி தமது அப்பதிவில், The Great MGR என்ற தலைப்பில் 47 வினாடி வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில், எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் கண்ட வளர்ச்சி, ஏழை மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளித்ததில் அவரது பங்கு உள்ளிட்டவை குறித்த ஆங்கிலத்திலும், இந்தியிலும் மோடியின் பேச்சு இடம்பெற்றுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்களும் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அவரை பாராட்டி, புகழ்ந்து தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்த எம்ஜிஆர், திமுகவில் இருந்து வெளியேறி, 1972 இல் அதிமுக எனும் கட்சியை ஆரம்பித்தார். 1977 முதல் 1987 வரை தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பொது வாழ்வில் அவரது சிறப்பான பங்களிப்பை பாராட்டு விதத்தில், அவரது மறைவுக்குபின் 1988 இல் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.