டெல்லி: இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். அண்மையில் நடந்த 18வது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறை பிரதமராக மோடி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து 3வது ஆட்சிக் காலத்தில் முதல் வெளிநாடு சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ஜி7 கூட்டமைப்பின் 50வது உச்சி மாநாடு இன்று முதல் 15ஆம் தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன்.13) இத்தாலி புறப்பட்டுச் சென்றார். ஜி7 மாநாட்டின் முதல் பகுதியான உச்சி மாநாட்டில் மட்டும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.