புதுடெல்லி:சைபர் குற்றங்களில் மிக முக்கிய மோசடியாக உள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், அதில் சிக்கிக்கொள்ளாமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
மாதாந்திர 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, டிஜிட்டல் அரெஸ்ட்டில் ஈடுபட்ட நபர் மற்றும் பாதிக்கப்பட்டவர் ஆகிய இருவருக்குள்ளும் நடந்த உரையாடலை ஆடியோவாக ஒலிக்க விட்டார். அப்போது பேசிய பிரதமர், '' நீங்கள் இப்போது கேட்ட உரையாடல் டிஜிட்டல் கைது மோசடி தொடர்பானது. இந்த உரையாடல் பாதிக்கப்பட்டவருக்கும் மோசடி செய்பவருக்கும் இடையிலான உரையாடல்.
முதலில் இந்தக் கும்பல் பாதிக்கப்பட்டவரின் இடத்துக்கு சென்று அவர்களது குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகள் போன்ற பல தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறது. பின்னர் அந்த கும்பல் சிபிஐ, வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து உங்களை செல்போனில் தொடர்புகொள்ளும். உங்கள் மீது ஒரு குற்றத்தை சுமத்தி அச்சுறுத்துவார்கள். பின்னர் உங்களை தனிமைப்படுத்தி வீடியோ காலில் அழைப்பார்கள்.
அப்போது மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், காவல்துறை சீருடையில் இருப்பதால் அவர்கள் மீது எந்த சந்தேகமும் வராது. தொடர்ந்து உங்கள் மீது வழக்கு போடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டுவார்கள். இதனால் மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த லட்சக்கணக்கான ரூபாயை, மிகுந்த அச்சத்தால் இழந்துள்ளனர்.
இதையும் படிங்க:உ.பியில் தொழிலதிபரின் மனைவியைக் கொன்ற ஜிம் கோச்.. திடுக்கிடும் பின்னணி!
இதுபோன்ற மோசடிகளில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள மூன்று வழிமுறைகளை கூறுகிறேன். முதலில், எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் செல்போனில் தொடர்பு கொண்டு பிறகு வீடியோ காலில் அழைத்து உங்களை டிஜிட்டல் கைது செய்யாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவ்வாறான அழைப்பு வந்தால் உடனே உரையாடுவதை நிறுத்துங்கள், பொறுமையாக சிந்தியுங்கள், பிறகு செயல்படுங்கள். பதட்டமில்லாமல் இருக்க வேண்டும் எந்த அவசர நடவடிக்கைகையும் எடுக்க வேண்டாம்.
குறிப்பாக உங்களது எந்தவித தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம். முடிந்தால் அவர்களுடன் ஆடியோ, வீடியோ அழைப்பில் உரையாடும்போது ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு காவல் நிலையத்தில் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். டிஜிட்டல் கைது என்ற பெயரில் நடக்கும் மோசடியை சமாளிக்க, அனைத்து புலனாய்வு அமைப்புகளும் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகின்றன.
இதுபோன்ற ஆயிரக்கணக்கான மோசடி வீடியோ அழைப்பு ஐடிகள் ஏஜென்சிகளால் தடுக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான சிம் கார்டுகள், மொபைல் போன்கள் மற்றும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. புலனாய்வு அமைப்புகளும் தங்களது பணியை செய்து வருகின்றன. இருப்பினும், டிஜிட்டல் கைது மோசடியில் இருந்து பாதுக்காக்க, ஒவ்வொரு குடிமகனும் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வகையான இணைய மோசடிக்கு ஆளானவர்கள் இதைப் பற்றி முடிந்தவரை பலருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பாதிக்கப்படுபவர்கள் தேசிய சைபர் ஹெல்ப்லைன் 1930 ஐ தொடர்புகொள்ளலாம் அல்லது சைபர் கிரைம் gov.in இல் புகாரளிக்கலாம். இதுபோன்ற சம்பவம் நேரும்போது உடனடியாக உங்களது குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து விடுங்கள்'' என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்