டெல்லி:அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் நேற்று நடைபெற்ற பேரணியின்போது, திரளான மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், டொனால்ட் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால், துரதிஷ்டவசமாக பார்வையாளர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் உயிரிழந்தார்.
அதேபோல், மற்றொரு பார்வையாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவரை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தில் இருந்து அழைத்துச் சென்றனர்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பென்சில்வேனியாவில் டிரம்பின் பேரணியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, டிரம்ப்பின் காதில் குண்டு உரசிச் சென்றதன் விளைவாக, அவரது காதிலிருந்து ரத்தம் வழிந்து ஓடியது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் தீவிர விசாரணை மேற்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தப்பட உள்ளதாகவும், தற்போது டிரம்ப் பாதுகாப்பாக உள்ளதாகவும் அமெரிக்க ரகசிய சேவை செய்தித் தொடர்பாளர் அந்தோணி குக்லீல்மி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது நண்பரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலை அறிந்து மிகுந்த கவலை அடைகிறேன். இந்தச் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலிலும், ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் குணமடைய பிராத்திக்கிறேன். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அமெரிக்க மக்களுடன் எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு! அலறும் அமெரிக்கா! - DONALD TRUMP SHOT IN US