கொச்சி:குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக குடியிருப்பின் உரிமையாளரை குவைத் போலீசார் கைது செய்தனர்.
தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைக்க மத்திய இணை அமைச்சர் கேவி சிங் தலைமையிலான குழு குவைத் விரைந்தது. தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் கேவி சிங் நேரில் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர இந்திய விமானப் படையின் C-130J சூப்பர் ஹெர்குலிஸ் என்ற போர் விமானம் குவைத் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், குவைத்தில் இருந்து இந்திய விமானப் படையின் போர் விமானம் இன்று (ஜூன்.14) அதிகாலை கொச்சி நோக்கிப் புறப்பட்டது.
இந்திய விமானப் படை விமானம் கொச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தில் கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழகத்தை சேர்ந்த 7 பேர், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 3 பேர், மற்றும் பீகார், ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஜார்கண்ட், அரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா ஒருவர் உள்ளிட்டோரின் உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.