ஹைதராபாத்: 18-வது மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இதில், ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இதில், தேசிய ஜனநாயக கூட்டணியான (NDA) தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜன சேனா கட்சிகள் ஆரம்பம் முதலே தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான 88 தொகுதிகளைக் கடந்து 134 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிப்பதால், ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபுவின் கை ஓங்கியுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்த தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 21 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், மக்களவையில் 2 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இதனால் ஆந்திராவின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வாய்ப்பை ஜன சேனா கட்சி பெற்றுள்ளது.