புதுடெல்லி:அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் வன்முறை ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுக்கின்றனர். கோரிக்கைகள் அனுமதிக்கப்படாததால் எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நான்காவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.
நாடாளுமன்றத்தின் மக்களவை கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று காலை 11 மணிக்கு கூடியது முதலாவது அலுவலாக கேள்வி நேரம் தொடங்கியது. இரண்டு கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதில் அளித்தனர். மத்திய அமைச்சர்கள் பதில் அளிக்கும்போதே எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி விவகாரத்தை எழுப்பி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வந்து கோஷமிட்டனர். இதனால் வேறு வழியின்றி அவையை ஒரு மணி நேரம் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். மக்களவை மீண்டும் நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது.அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கூச்சலிட்டனர்.
இதையும் படிங்க:கனமழை எச்சரிக்கை: பயணிகளுக்கு சென்னை விமான நிலைய ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்..!
எனினும் அமளிக்கு இடையே மத்திய அமைச்சர்கள் சில அறிக்கைகளை தாக்கல் செய்தனர். அப்போது மக்களவையை வழிநடத்திய திலீப் சைக்கியா எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார். எனினும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அதற்கு செவி மடுக்கவில்லை. எனவே வேறு வழியின்றி மக்களவையை நாள் முழுவதும் அவர் ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையும் முடங்கியது: மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்குதொடங்கியதும் பேசிய அவை தலைவர் ஜகதீப் தங்கர், மாநிலங்களவையின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு விதி 267ன் கீழ் 17 பேர் அளித்திருந்த ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ்களை நிராகரிப்பதாக கூறினார்.
இதையடுத்து இருக்கைகளில் இருந்து எழுந்த எதிர்கட்சி எம்பிக்கள், அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் வன்முறை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எனினும் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தங்கர் அதற்கு உடன்படவில்லை. அப்போது பேசிய தன்கர், "விதி 267ஐ இடையூறு செய்வதற்கான ஆயுதமாக பயன்படுத்தும் சிந்தனையை கொண்டிருக்கிறீர்கள்,"என்று கூறினார்.
அவரது விமர்சனத்தை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்து முழக்கம் இட்டனர். அவையை நாள் முழுவதும் ஒத்தி வைக்கும் முன்பு பேசிய ஜகதீப் தங்கர், இதே விஷயத்துக்காக மீண்டும், மீண்டும் எழுப்புகிறீர்கள். இதனால் மாநிலங்களவையின் அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன,"என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்