புதுடெல்லி:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரண்டாம் நாளான இன்றும் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அதானி மீதான வழக்கு குறித்து விவாதிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர் காலக்கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று இரு அவைகளிலும் வக்ஃப் திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்கள் விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டிருந்தன. மக்களவை இன்று கூடியதும் சில துறைகள் தொடர்பான அறிக்கைகளை மத்திய அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். எனினும் அதானி மீதான அமெரிக்க வழக்கு குறித்து விவாதிக்கும்படி எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர்.
எதிர்கட்சிகளின் உறுப்பினர்களை அமைதியாக இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் ஓம்பிர்லா வலியுறுத்தினார். எனினும், எதிர்கட்சியினர் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லாவின் கோரிக்கைக்குப் பின்னரும் எதிர்கட்சி எம்பிக்கள் அமைதி காக்கவில்லை. இதையடுத்து மக்களவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.
மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு:மாநிலங்களவை இன்று கூடியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள், அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள அதானி மீதான வழக்கு குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் அதானி விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 18 ஒத்திவைப்பு தீர்மானங்களுக்கான நோட்டீஸ்களை கொடுத்திருந்தனர்.