புதுடெல்லி:மக்களவையில் இன்றைய நிகழ்வின் போது பேசிய தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதி மணி, பாஜகவுக்கும் பிரபல தொழிலதிபருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் 13ஆவது நாளாக இன்று வழக்கம் போல் தொடங்கியது. மக்களவையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் மதுரை டங்க்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இது குறித்து பேசிய அவர், "மதுரையில் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள டங்க்ஸ்டன் சுரங்க திட்டம் தமிழகத்தின் முதலாவது பல்லுயிர் பாரம்பரிய தலமாகும். இந்த சுரங்க திட்டமானது அந்த பிராந்தியத்தின் சூழலுக்கு அச்சுறுத்தல் ஆகும். இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது மட்டுமின்றி, அந்த பகுதி நிலத்தை சார்ந்திருக்கும் ஆயிரகணக்கான மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதகமான சூழலை ஏற்படு்ததும். எனவே தமிழக மக்களின் கவலைகளை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை ரத்து செய்ய உடன நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என்று கோரிக்கை விடுத்தார்.
மன்னிப்பு கடிதம் கொடுத்த திரிணாமூல் எம்பி:மக்களவையில் நேற்று பேரிடர் மேலாண்மை திருத்த சட்டம் குறித்த விவாதத்தின் போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியாவுக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி கல்யாண் பானர்ஜி ஆட்சேபத்துக்குரிய வார்த்தையை பயன்படுத்தி விமர்சனம் செய்தார். இதற்காக அவையிலேயே அவர் மன்னிப்புக் கேட்டார். எனினும் அதனை ஏற்கமுடியாது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியா கூறி விட்டார். இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும் இந்த விவகாரத்தை ஆளும் கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். அப்போது தலையிட்ட சபாநாயகர் ஓம்பிர்லா, "புதன்கிழமையன்று அவையில் எதிர்பாரத நிகழ்வு நடந்திருக்கிறது. எந்த ஒரு உறுப்பினரும் சக உறுப்பினருக்கு எதிராக எந்த ஒரு தனிப்பட்ட விமர்சனமும் மேற்கொள்ளக்கூடாது. சம்பந்தப்பட்ட உறுப்பினர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அவர் என்னிடம் எழுத்துப்பூர்வமாகவும் மனிப்புக் கடிதம் கொடுத்திருக்கிறார்,"என்று கூறினார்.