புதுடெல்லி:நாடாளுமன்றத்தின் குளிர்காலக்கூட்டத்தொடர் 12ஆவது நாளாக இன்றும் வழக்கம் போல் தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் மூவர்ண கொடி, ரோஜாப்பூக்களை கையில் ஏந்தியபடி ஆளும் பாஜக எம்பிக்களை வாழ்த்துவதாக விநோத முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதானி விவகாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆளும் கட்சியினர் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தல்:மக்களவையில் இன்று துணை கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ், இன்றைக்கு உலகம் முழுமைக்கும் போலியான கருத்துகள் முக்கிய சவாலாக திகழ்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியில் அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்க அரசு உதவி செய்கிறது," என்றார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரம் முழுமையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜீரோ ஹவரில் முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற இருந்தன. காங்கிரஸ் உறுப்பினர் கௌரவ் கோகோய், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினார். வடகிழக்கு மாநிலங்களில் அரசின் தோல்வியை மறைப்பதற்காக அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸுக்கு எதிராக பாஜக குற்றச்சாட்டை முன் வைப்பதாக கூறினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், காங்கிரஸ் தலைவர்கள் அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் பின்னணியில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்றார். இதனால் ஆளும் கட்சி எம்பிக்கள், எதிர்கட்சி எம்பிக்கள் என இரண்டு தரப்பிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. எனவே அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த சந்தியா ராய் மதிய உணவு இடைவேளை வரை மக்களவையை ஒத்தி வைத்தார்.
ராகுல் கோரிக்கை:மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்த பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,"சபாநாயகரை நான் சந்தித்தேன். என் மீதான கீழ்த்தரமான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கூறினேன். அது குறித்து பரிசீலிப்பதாக அவை தலைவர் கூறினார். இந்த தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். அவையில் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். என்னைப் பற்றி அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது விஷயமல்ல. வரும் 13ஆம் தேதி விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றோம். அவர்கள் அதானி குறித்து விவாதம் நடத்த விரும்பவில்லை. நாங்கள் அதை விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்களுக்கு எதிராக அவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். ஆனால், அவை நடைபெற வேண்டும்,"என்றார்.
எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு:மாநிலங்களவை இன்று கூடியதும் இருக்கையில் இருந்து எழுந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு,விவசாயியின் மகன் துணை குடியரசு தலைவராக இருக்கிறார். அவையின் கவுரவத்தை அவர் கட்டிக்காப்பதாக ஒட்டு மொத்த நாடும் அவரை பார்க்கிறது. நீங்கள் அவைத்தலைவர் என்ற முறையில் அவருக்கு மரியாதை கொடுக்காவிட்டால், உறுப்பினராக இருக்க உங்களுக்கு உரிமை இல்லை. நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பது என்று நாம் பதவி ஏற்றிருக்கின்றோம்.
இந்த நாட்டுக்கு எதிராக உள்ள அமைப்புகளுடன் நீங்கள்(காங்கிரஸ்) உள்ளீர்கள். அவை தலைவருக்கு எதிராக நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற அவை தலைவரை பார்ப்பது சிரமம். அவர் எப்போதுமே ஏழைகள் நலனுக்காக பேசுபவர், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பவர், நோட்டீஸ் என்ற இந்த நாடகம் வெற்றி பெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அமெரி்கக கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். காங்கிரஸ் தேசத்தின் முன்பு மன்னிப்புக் கேட்கவேண்டும்,"என்றார்.
அவரை பேச விடாமல் காங்கிரஸ் எம்பிக்கள் எழுந்து நின்று கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து மாநிலங்களவை முதலில் ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோதும் கூச்சம் குழப்பம் தொடர்ந்ததை அடுத்து நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
அவையை செயல்பட அனுமதிக்க வேண்டும்:இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்,"இந்திய மக்களின் சார்பாக மோடி அரசிடம் வேண்டுவது என்னவெனில், நாடாளுமன்றம் செயல்பட அனுமதியுங்கள், விவாதத்தில் இருந்து தப்பிக்க வேண்டாம்,"என்று கூறியுள்ளார்.