புதுடெல்லி:இந்தியாவை சீர்குலைக்கும் அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸின் கருவியாக காங்கிரஸ் செயல்படுகிறது என மாநிலங்களவையின் பாஜக அவை தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் 10ஆவது நாளாக இன்று வழக்கம்போல் தொடங்கியது. மாநிலங்கவையில் உறுப்பினர் சோனியா காந்திக்கு அவை தலைவர் ஜகதீப் தன்கர் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் ஆளும் பாஜக எம்பிக்கள், காங்கிரஸ் கட்சிக்கும் ஜார்ஜ் சோரோஸ் என்பவருக்கும் இடையேயான தொடர்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஏற்கவில்லை. எனினும் பாஜக உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியபடி இருந்தனர். எனவே வேறு வழியின்றி அவையை 12 மணி வரை மாநிலங்களவைத் தலைவர் தன்கர் ஒத்தி வைத்தார்.
மாநிலங்களவை மீண்டும் நண்பகல் 12 மணிக்கு கூடியபோதும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். அவர்களுக்கு எதிராக இந்தியா கூட்டணி உறுப்பினர்களும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் மதியம் உணவு இடைவேளை வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. மதியம் இரண்டு மணிக்கு மாநிலங்களவை கூடியபோது பாஜக உறுப்பினர் ஜே.பி.நட்டா, "இந்தியாவை சீர்குலைக்கும் வகையில் (அமெரிக்க கோடீஸ்வரர்) ஜார்ஜ் சோரஸ் என்பவரின் கருவியாக காங்கிரஸ் மாறி வருகிறது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கும் ஜார்ஜ் சோரோஸுக்கும் இடையேயான தொடர்பு விவாதிக்கப்பட வேண்டும்,"என்றார். இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பாஜக அவை தலைவர் ஜே.பி.நட்டா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே இருவரையும் தமது அறைக்கு வரும்படியும், அவையை சுமுகமாக நடத்துவது பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து அவை ஒருமணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்,"சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு ஜார்ஜ் சோரஸ் நிதி உதவி அளிக்கும் அமைப்புகளோடு தொடர்பு உள்ளது. ஜார்ஜ் சோரஸ் கருத்தைத்தான் ராகுல் பேசுகிறார். இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு ஜார்ஜ் சோரஸ் நிதி உதவி அளிக்கிறார்,"என்று குற்றம் சாட்டினார்.
மக்களவையிலும் அமளி: மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். ஆனால், அவைத்தலைவர் ஓம்பிர்லா அதற்கு அனுமதிக்கவில்லை. எனினும் எதிர்கட்சியினர் தங்கள் கோரிக்கையை விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை. எனவே மக்களவை முதலில் நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மக்களவை மீண்டும் நண்பகல் கூடியபோது ஆளும் கட்சி எம்பிக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் ஜார்ஜ் சோரோஸ் என்பவருக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வலியுறுத்தினர். பதிலுக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினர். எனவே உணவு இடைவேளை வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு மக்களவை தொடங்கியபோதும் எதிர்க்கட்சிகளின் கூச்சம் குழப்பம் முடிவுக்கு வரவில்லை. எனவே அவை மீண்டும் ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், அதானி மீதான அமெரிக்க வழக்கு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.