டேராடூன்:மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அதே போன்றதொரு சம்பவம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அரங்கேறி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்த பதின் பருவ சிறுமி தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறுமி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சிறுமி, டெல்லி வழியாக மொரதாபாத் பகுதிக்கு வந்து உள்ளார்.
தொடர்ந்து அங்கிருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு விரைந்துள்ளார். மொரதாபாத்தில் இருந்து மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்து மூலம் டேராடூனுக்கு அதிகாலை 2.30 மணிக்கு சிறுமி வந்து உள்ளார். இந்நிலையில், சிறுமி பேருந்தில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட சிலர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி அதிகாலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் இறுதியில் பேருந்தில் இருந்து கீழ் இறக்கிவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. கொட்வளி படேல் நகர் போலீஸ் சோதனைச் சாவடி அருகே அலங்கோலமாய் நின்று கொண்டு இருந்த சிறுமியை கண்ட அருகில் இருந்தவர்கள் சிறுவர்கள் நல காப்பகத்திற்கு தகவல் அளித்து உள்ளனர்.