ஸ்ரீநகர்:காஷ்மீரில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 42 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 48 எம்எல்ஏக்களுடன் தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் கிடைக்கக்கோரி அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில், நவம்பர் 4ம் தேதி ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத்தை கூட்ட துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அழைப்பு விடுத்துள்ளார். 90 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில், 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.
இதையும் படிங்க:'இப்போ டாடா இல்லையே'.. இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான ஆலை.. மனமுருகிய பிரதமர் மோடி!
இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் வட்டாரத்தில் கூறப்பட்ட தகவலின்படி, '' சட்டப்பிரிவு 370 மீதான தீர்மானத்தை முதல் கூட்டத்திலேயே முன்வைக்க நாங்கள் உறுதியாக உள்ளோம்.. நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றுவோம். 370வது சட்டப்பிரிவை மீட்டெடுக்க வேண்டும் என்று தீர்மானம் போடப்படும்.. சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். சட்டசபை கூட்டத்தில் இந்த தீர்மானம் முதல்வர் உமர் அப்துல்லாவால் முன்மொழியப்படும் என்றும் முன்பிருந்தபடி, ஜம்மு காஷ்மீருடன் லடாக்கை சேர்க்க உறுதியாக உள்ளோம்'' என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வருகிற சட்டமன்ற கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பாஜக உறுப்பினர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றாலும் மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜேகேபிசி உறுப்பினர்கள் ஆகியோர் ஆதரவளிப்பார்கள் என்று ஆளுங்கட்சி எதிர்பார்க்கிறது.
முன்னதாக அக்டோபர் 17 அன்று முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சட்ட நடைமுறையின்படி 370 வது சட்டப்பிரிவு சட்டமன்றத்தின் களமாகும். இருப்பினும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்