மும்பை:ரத்தன் டாடா மறைவை அடுத்து டாடா அறக்கட்டளைகளுக்கான அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அறக்கட்டளையின் போர்டு கூட்டம் தொடங்கியுள்ளது. நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ரத்தன் டாடா தமது 86 ஆவது வயதில் நேற்று மரணம் அடைந்தார். இதையடுத்து அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக டாடா அறக்கட்டளையின் போர்டு கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது.
டாடா அறக்கட்டளை தலைவர் தேர்வு குறித்து அறக்கட்டளையின் பத்திரங்களில் தெளிவாக வழிகாட்டுதல்கள் கூறப்பட்டுள்ளன. அதன்படிதான் அறக்கட்டளை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ட்ரெண்ட், டாடா இன்டர்நேஷனல் லிமிடெட், வோல்டாஸ் லிமிடெட் உள்ளிட்ட டாடா நிறுவனங்களில் நோயல் டாடா தற்போது தலைவராக இருக்கிறார்.
2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டாடா குழுமத்தில் இணைந்ததில் இருந்து அந்த பெருநிறுவன குழுமத்தின் வளர்ச்சிக்கு நோயல் ஒரு கருவியாக இருந்து வருகிறார். மேலும் டாடா ஸ்டீல், டைட்டன் ஆகிய நிறுவனங்களின் துணை தலைவராகவும் அவர் இருக்கிறார்.
இதையும் படிங்க:மும்பையில் முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம்!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நோயல் டாடாவின் மூன்று பிள்ளைகளான லியா, மாயா மற்றும் நெவில் ஆகியோர் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை, சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை தொடர்புடைய பல்வேறு அறக்கட்டளைகளில் அறக்கட்டளை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
லியா தற்போது இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் துணை தலைவராக உள்ளார். மாயா, டாடா கேப்பிட்டல் நிறுவனத்தின் பொறுப்பில் இருக்கிறார். நெவில், ட்ரெண்ட் நிறுவனத்தின் பொறுப்பிலும், ஸ்டார் பஜார் என்ற தலைமை குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.
14 டாடா அறக்கட்டளைகளின் தலைமை நிறுவனமாக டாடா அறக்கட்டளை செயல்படுகிறது. டாடா அறக்கட்டளையானது டாடா சன்ஸ் நிறுவனத்தின் 65.3 % பங்குகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நிறுவனத்தை வழிநடத்துவதில் முக்கியமான பொறுப்பை டாடா அறக்கட்டளை வகிக்கிறது.
டாடா அறக்கட்டளையின் கீழ் உள்ள சர் ரத்தன் டாடா அறக்கட்டளை, சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை என்ற இரண்டு முக்கிய அறக்கட்டளைகள்தான் டாடா சன்ஸ் நிறுவனத்தின் உரிமையை கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு அறக்கட்டளைகளும் சேர்ந்து டாடா சன்ஸ் நிறுவனத்தின் 50 சதவிகித உரிமையைக் கொண்டிருந்தன. இதன் செயற்குழு தலைவராக ரத்தன் டாடா இருந்தார்.
செயற்குழுவின் மூன்று முக்கிய நபர்களாக வேணு சீனிவாசன், டாடா அறக்கட்டளையின் துணை தலைவர் விஜய் சிங், அறக்கட்டளை உறுப்பினரான மெஹில் மிஸ்ரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 2023ஆம் நிதி ஆண்டில், பல்வேறு முயற்சிகளுக்கு டாடா அறக்கட்டளை 581.52 கோடியை வழங்கி உள்ளது.