டெல்லி:கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு மலைப் பகுதியில் உள்ள சூரல் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அமித் ஷா கருத்து: இந்த கோரமான நிகழ்வு குறித்து மாநிலங்களைவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கேரளாவில் கடும் மழைப்பொழிவு இருக்கும் என ஏழு நாட்களுக்கு முன்னதாக ஜூலை 23ஆம் தேதியே கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அதே நாளில் ஒன்பது தேசிய பேரிடர் குழுவினரை கேரளாவுக்கு அனுப்பி வைத்தோம்.
ஜூலை 24 அன்று மற்றொரு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது. இருப்பினும், கேரள அரசு முன்னெச்சரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படை அனுப்பப்பட்டும்கூட எச்சரிக்கையாக இருக்கவில்லை. தேசிய மீட்புப் படையினர் கேரளாவில் இறங்கியவுடனே கேரள அரசு உஷாராகியிருந்தால் இழப்புகளைக் குறைத்திருக்கலாம்'' என தெரிவித்தார்.
பினராயி விஜயன் மறுப்பு: இதற்கு மறுப்பு தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நிலச்சரிவு நடந்த பகுதிக்கு ரெட் அலர்ட் கூட வழங்கப்படவில்லை. இதனிடையே, சம்பவத்தன்று காலை (ஜூலை 30) தான் ரெட் அலர்ட் வழங்கப்பட்டது. அதுவும் பயங்கர நிலச்சரிவுக்குப் பிறகே வழங்கப்பட்டது. மேலும், வெள்ளம் குறித்த எச்சரிக்கை விடுக்கும் மத்திய நீர் ஆணையமும், ஜூலை 23 முதல் 29 வரை எந்தவித எச்சரிக்கையும் அளிக்கவில்லை'' என்றார்.
அதன்படி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறும் ஜூலை 23ஆம் தேதி வானிலை ஆய்வு மைய அறிக்கையில் எந்த இடத்திலும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், கேரளாவில் கடும் மழைப்பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது என அமித் ஷா கூறியதும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.