டெல்லி:மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தட்டா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று (மே.7) இடைக்கால ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணையை மே 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். முன்னதாக வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு அவர் தனது பணிகளை மேற்கொண்டால் மோதல்களை வழிவகுமா என்று கேள்வியெழுப்பினர்.
அரவிந்த் கெஜ்ரிவால் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் அல்ல என்றும் வேறேதும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் அல்ல என்று தெரிவித்த நீதிபதிகள் நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் அரசு பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் அது பல்வேறு மோதல்களுக்கு வழிவகுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்த முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்த அமலாக்கத்துறை, உச்ச நீதிமன்றம் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு என தனி அணுகுமுறையை கையாளக் கூடாது என்று தெரிவித்தது.