புதுடெல்லி: அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்தாண்டு இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி பங்கு சந்தையில் முறைகேடு செய்திருப்பதாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் செவி சாய்க்காமல் இருந்த செபி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு கெளதம் அதானி மீது ஹிண்டன்பர்க் வைத்த குற்றசாட்டை குறித்து விசாரிக்க தொடங்கியது.
கடந்த ஜனவரி 3 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், விசாரணையை முடிக்க செபிக்கு மூன்று மாதங்கள் அவகாசம் அளித்தது. ஆனால், நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிந்தும் விசாரணை அறிக்கையை செபி வெளியிடவில்லை. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மற்றொரு அறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க், அதானி குழுமம் விதிமுறைகளை மீறுவதற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிதியில் செபி தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியது.
இந்த குற்றசாட்டை செபி மற்றும் அதானி தரப்பும் திட்டவட்டமாக மறுத்திருந்தது. இந்த சூழலில், அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் முதன்முதலில் மனுத் தாக்கல் செய்த வழக்கறிஞர் விஷால் திவாரி தற்போது மற்றொரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'அதானி மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டு வைத்து வெளியிட்ட முதல் அறிக்கை குறித்த விசாரணை அறிக்கையை செபி வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், விசாரணையில் என்னென்ன விஷயங்களை செபி கண்டுபிடித்துள்ளது என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும். நிதியை இழந்த முதலீட்டாளர்களின் நலனுக்கு அது முக்கியமானதாக இருக்கும். விசாரணையின் முடிவுகளை பற்றி அறிவது முதலீட்டார்களின் உரிமை' என கூறியுள்ளார்.
மேலும், 'ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டை செபி தலைவர் ஆதாரமற்றது என்று மறுத்துள்ளார். மேலும் மூன்றாம் தரப்பு அறிக்கைகளை பரிசீலிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இவை அனைத்தும் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், நிலுவையில் உள்ள விசாரணைகளை முடித்துவிட்டு விசாரணையின் முடிவை அறிவிப்பது செபியின் பொறுப்பாகும்' எனவும் விஷால் திவாரி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, அதானி குழுமத்துடன் செபி தலைவருக்கு தொடர்பு இருப்பதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியுள்ள நிலையில் மதாபி பூரி புச் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், அதானி மீதான குற்றசாட்டு குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது செபிக்கு மேலும் தலைவலியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க:அதானி - செபி தலைவர் விவகாரம்: நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரும் காங்கிரஸ்! பாஜக மறுக்க காரணம் என்ன?