தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீட் தேர்வை ரத்து செய்யணுமா?- அப்போ இதை செஞ்சே ஆகணும்! - மனுதாரர்களிடம் உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் - neet exam case update - NEET EXAM CASE UPDATE

நீட் தேர்வு வினாத்தாள் திட்டமிட்டு கசியவிடப்பட்டது என்பதை மனுதாரர்கள் நிரூபித்தால் தான் தேர்வை ரத்து செய்வது குறித்து உத்தரவிட முடியும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு தொடர்பான கோப்புப்படம்
நீட் தேர்வு தொடர்பான கோப்புப்படம் (Image Credit - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 12:42 PM IST

புதுடெல்லி:நீட் தேர்வு வினாத்தாள் திட்டமிட்டு கசியவிடப்பட்டது என்பதை மனுதாரர்கள் நிரூபித்தால் தான் தேர்வை ரத்து செய்வது குறித்து உத்தரவிட முடியும் என்று உச்ச நீதிமன்றம் இன்று திட்டவட்டமாக தெரிவிததுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு விவகாரம் குறித்து இத்தேர்வில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலர் தொடுத்துள்ள வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஒன்றாக சேர்த்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கின் முடிவுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து எங்களிடம் சிபிஐ கூறியது தெரியவந்தால் அது வழக்கு விசாரணையை பாதிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அத்துடன், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு காரணமாக, அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யவும், மறுதேர்வு நடத்தவும் கோரும் மனுதாரர்கள், நீட் தேர்வு வினாத்தாள் எவ்வாறு திட்டமிட்டு கசியவிடப்பட்டது, அதனால் ஒட்டுமொத்த தேர்வும் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் இத்தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

அதாவது, "வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு காரணமாக, நீட் தேர்வின் ஒட்டுமொத்த நோக்கமும் சிதைந்துவிட்டது என்றால் மட்டுமே மறுதேர்வு குறித்து யோசிக்க இயலும்" என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.

மேலும், 2024 -25 ஆம் கல்வியாண்டுக்கான நீட் இளநிலை நுழைவுத் தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் அவர்கள் எந்தெந்த நகரங்களில் தேர்வு எழுதினார்கள் என்பது குறித்து நீதிமன்ற்ம் அறிய விரும்புவதாகவும் வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக தற்போது நடைபெற்றுவரும் விசாரணை குறித்த தமது இரண்டாவது நிலை அறிக்கையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணை மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

2024-25 ஆம் கல்வியாண்டில், மருத்துவப் மாணவர் சேர்க்கைக்கான நீட் இளநிலை நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் ஜுன் 4 ஆம் தேதி வெளியாகின.

என்டிஏவுக்கு சரமாரி கேள்வி: உணவு இடைவேளைக்கு பிறகு, வழக்கு விசாரணை மீண்டும் தொடர்ந்தது. அப்போது, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக,ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் புதிதாக ஒரேயொரு நபருக்கு மட்டும் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு அனுமதி அளித்திருந்த நிலையில், 15 ஆயிரம் புதிய விண்ணப்பங்களுக்கு எப்படி அனுமதிக்கப்பட்டன? என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

அப்படியானால், "இந்த 15 ஆயிரம் பேர்களில் எத்தனை பேர் தங்களின் தேர்வு மையங்களை மாற்றி உள்ளனர்? இந்தத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வசதி எவ்வளவு காலம் வழங்கப்பட்டிருந்தது? இந்த வாய்ப்புகள் தேர்வு முறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?" என்று தலைமை நீதிபதி அமர்வு என்டிஏ தரப்பிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.

'சில விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியை அடிப்படையாகக் கொண்டு, தேர்வு மையத்தை மாற்றியுள்ளனர்.குறிப்பிட்ட சிறிது நேரத்துக்கு அளிக்கப்பட்டிருந்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி, எத்தனை பேர் தங்களின் தேர்வு மையத்தை மாற்றியுள்ளனர் என்பதை கண்டறிவது சவாலான பணி. அதை நாங்கள் ஒருபோதும் அறிய முடியாது. கணினி வழியிலும் இதுவரை இதுகுறித்த தகவல்களை பெற முடியவில்லை" என்று என்டிஏ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

விண்ணப்பத்தில் திருத்தம் என்ற பேரில், குவஹாத்தியை சேர்ந்த ஒரு விண்ணப்பதாரர், லக்னெளவை தேர்வு மையமாக தெரிவு செய்ய முடியும். விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு மையத்தை என்டிஏ மட்டுமே கணினி முறையில் ஒதுக்கீடு செய்ய முடியும்போது, குறிப்பிட்ட விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையத்தை எப்படி மாற்றிக் கொண்டார்கள்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க:கன்னடர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு மசோதா தற்காலிக நிறுத்தம்.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details