டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முடிவுகள் குளறுபடி விவகாரம் நாடளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்திலும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் நீட் குளறுபடி குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் நடந்து முடிந்த நீட் UG 2024 தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுக்களை இன்று உச்ச மீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீட் மறுதேர்வு கோரும் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் நரேந்திர ஹூடா ஆஜராகி, ''தேர்வு முகமை வெளியிட்டிருக்கும் முடிவில் பல முரண்பாடுகள் இருக்கிறது. வினாத்தாள் கசிவு நடந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பீகார் காவல்துறையின் விசாரணையில், மே 4 ஆம் தேதி வினாத்தாள் கசிவு நடந்ததாகவும், அந்தந்த வங்கிகளில் வினாத்தாள்கள் பத்திரப்படுத்தி வைப்பதற்கு முன்பே கசிந்திருப்பது தெரிய வந்துள்ளது என்றார்.