ஒட்டாவா (கனடா): நிஜ்ஜார் கொலை குறித்து இந்திய அரசின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு முன்பே தெரியும் என கனடா ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்திக்கு கனடா அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்த 45 வயதான நிஜ்ஜார், கனடாவிற்கு குடிபெயர்ந்தவர் ஆவார். அங்கு அவர் பிளம்பிங் தொழில் செய்து வந்ததாகத் தெரிகிறது. மேலும் காலிஸ்தான் இயக்கத்தை முன்னெடுத்தும் வந்தார். இதனிடையே இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இவரது கொலை குறித்து இந்தியா-கனடா இடையே பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன.
இந்த நிலையில் கனடாவில் இருந்து வெளியாகும் குளோப் அண்ட் மெயில் எனும் பத்திரிகையில் பெயர் சொல்ல விரும்பாத கனடா அதிகாரி கூறியதாக செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த செய்தியில் காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த நிஜ்ஜார் கொலை சதித்திட்டம் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு முன்கூட்டியே தெரியும் என்று கூறப்பட்டிருந்தது. குறிப்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கும் இந்த கொலை சதித்திட்டம் முன்கூட்டியே தெரியும் என்று அந்த கனடா பத்திரிகை தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க : அமெரிக்கா பிடிவாரண்ட்: அதானியுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்த கென்யா..!
இந்த நிலையில் கனடா பத்திரிகையின் செய்திக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இது ஒரு அபத்தமான செய்தி, இதனை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஏற்கனவே இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இந்த செய்தி மேலும் அதனை சீர்கெடுக்கிறது. நாங்கள் பொதுவாக இது போன்ற ஊடக செய்திகளுக்கு கருத்துச் சொல்வதில்லை. ஆனால், இந்த பொய் செய்தியை நிராகரிக்க வேண்டும். இது போன்ற அவதூறு பிரச்சாரங்கள் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன,"என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கனடா ஊடகம் வெளியிட்ட செய்தியை கனடா அரசு மறுத்துள்ளது. கனடாவின் பிரைவி கவுன்சிலின் துணை எழுத்தர் மற்றும் பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகர் நதாலி ஜி ட்ரூயின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் அதிகாரிகள் கனடாவில் இந்திய அரசாங்கத்தின் முகவர்களால் நிகழ்த்தப்பட்ட கடுமையான குற்றச் செயல்கள் குறித்து பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அசாதாரண நடவடிக்கையை எடுத்துள்ளனர். பிரதமர் மோடி, அமைச்சர் ஜெய்சங்கர் அல்லது என்எஸ்ஏ தோவல் ஆகியோர் கனடாவிற்குள் நடந்த கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்தியதாக கனடா அரசு கூறவில்லை, அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதற்கு நேர்மாறான எந்தவொரு பரிந்துரையும் ஊகமானது மற்றும் தவறானது," என்று கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்