கொல்கத்தா:கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் மாதம், இளம் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கோரியும், மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 5 ஆம் தேதி முதல் கொல்கத்தாவில் இளம் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த நிலையில் இளம் மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மூத்த மருத்துவர்கள் 50 பேர், இன்று ஒரே நேரத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இச்சூழலில், மேற்கு வங்கத்தில் உள்ள மற்ற மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள் சிலர், தாங்களும் இதேபோல் ராஜினாமா செய்யக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் 7 இளம் மருத்துவர்கள் துவங்கிய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள மற்ற மருத்துவக் கல்லூரிகள் முழுவதுமிருந்து ஆதரவு பெருகுகிறது. இதன் எதிரொலியாக தற்போது மூத்த மருத்துவர்களும் கூண்டோடு தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:ஜம்மு -காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள்: நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி நிலவரம்!
மேற்கு வங்க மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் அமைப்புகளில் ஒன்றான, சுகாதார சேவை மருத்துவர்கள் சங்க பிரதிநிதி மருத்துவர் மனாஸ் கும்தா கூறுகையில், "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு தொடர்ந்து இழுத்தடித்தால், அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து மூத்த மருத்துவர்களுக்கும் மாநிலம் தழுவிய அளவில் அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது எங்கள் இளம் மருத்துவர்களுக்கான ஆதரவு நிலைப்பாடு. இன்றைக்குள் இதுதொடர்பாக எங்கள் அமைப்புகள் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்" என்றார்.
முன்னதாக மருத்துவர்களின் போராட்டம் தொடர்பாக அம்மாநில அரசு தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த், "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை மாநில சுகாதார அமைப்பில் ஒன்றிணைந்து செயல்படுமாறும், மருத்துவக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, பாதுகாப்பை அதிகரிப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் அரசுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை" என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்