திருவனந்தபுரம் (கேரளா):வெளிநாட்டில் இருந்து தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்திற்கு திரும்பிய 75 வயது முதியவருக்கு பாக்டீரியா தொற்றால் (flea-borne disease) ஏற்படும் முரைன் டைபஸ் (MURINE TYPHUS) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் பிளே காய்ச்சலுக்கு இணையான முரைன் டைபஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, கடுமையான உடல் வலி, சோர்வு மற்றும் பசியின்மை காரணமாக கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என தெரியவந்துள்ளது. மேலும், முரைன் டைபஸ் தொற்றுக்கான பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என முடிவுகள் வெளிவந்தது. பின்னர், அவரது இரத்த மாதிரிகள் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்ட நிலையில், முரைன் டைபஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், முதியவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக் குழு தற்போது சிகிச்சை அளித்து வருவதாகவும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது என்பதால் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முரைன் டைபஸ் என்றால்? :நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் படி, Rickettsia typhi எனும் பாக்டீரியா மனிதர்களில் முரைன் டைபஸ் (எண்டெமிக் டைபஸ்) ஏற்படுவதற்கான காரணியாகும். எலிகள் மற்றும் பிளே (Flea) மூலம் R. typhi ஏற்படுகின்றன. இந்த நோய்த்தொற்று அதிக நெரிசல், மாசுபாடு மற்றும் மோசமான சுகாதாரத்துடன் இருக்கும் இடங்களுடன் தொடர்புடையது என தெரியவந்துள்ளது.
அறிகுறி?:காய்ச்சல், தலைவலி மற்றும் தண்டுவடப் பகுதியில் சொறி போன்ற அறிகுறிகளை கொண்டுள்ளது. சில நேரங்களில், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் அல்லது மூளையில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த தொற்று அறிகுறி டெங்கு காய்ச்சலுக்கு ஒத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:எய்ட்ஸ் இருப்பது தெரியாமலே வாழும் 12,000 பேர்.. தமிழக சுகாதாரத்துறை அதிர்ச்சித் தகவல்