கேரளா (திருவனந்தபுரம்):கேரளா காசர்கோடு பகுதியில் நடந்த விரர்காவு கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து இரவு 12 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் உள்ள நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் விரர்காவு கோயில் திருவிழா கோலாகலமாக நடந்து வந்தது. இந்நிலையில், திருவிழாவில் வாணவேடிக்கை களியாட்டம் நிகழ்ச்சியின்போது, ஏராளமான பக்தர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட மக்கள் அங்குமிங்குமா ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனால், இந்த தீ விபத்தி சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 97 பேர் 40% மற்றும் 60% தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்துள்ளனர்.