டெல்லி: டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் மே மாதம் 25ஆம் தேதி இரவு எதிர்பாரா விதமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் புதிதாக பிறந்த 6 குழந்தைகள் உயிரிழந்தனர். இதில், மேலும் ஐந்து குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், மற்றுமொரு குழந்தை உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்து, நாடுமுழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், டெல்லி சுகாதாரத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 1000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 196 மட்டுமே தீ விபத்து குறித்த தடையில்லா சான்று (Fire NOC) உள்ளது என்றும், மிதமுள்ள 800-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் NOC சான்று இல்லாமல் செயல்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற மருத்துவமனைகளில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தப்பித்துச் செல்வதற்கான வழிகள் ஏதும் இல்லாமலும், பேரிடர் ஏற்பட்டால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் செய்யப்படாமலும் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவசரக்கால நடவடிக்கைகளுக்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லாது மருத்துவமனைகளை நடத்துவதற்கான உரிமம் இந்த மருத்துவமனைகளுக்கு எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து தற்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொதுவாக விதிகளின்படி, டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கும் உரிமம் வழங்கும் அதிகாரம் ஹெல்த் சர்வீசஸ் பொது இயக்குநரகத்திற்கு (DGHS) உள்ளது. இது டெல்லி அரசின் சுகாதாரத் துறையின் கீழ் செயல்படுகிறது. அந்தவகையில், எந்தவொரு முதியோர் இல்லம் அல்லது மருத்துவமனைக்கு உரிமம் வழங்குவதற்கு முன்பு, அந்த கட்டிடம், அதன் வரைபடத் தகவல் மற்றும் தீ விபத்து குறித்த தடையில்லா சான்று ஆகியவை குறித்து முழுமையான தகவல்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே உரிமம் வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.
மேலும், எந்த ஒரு நிறுவனம் தீ விபத்து குறித்த தடையில்லா சான்றுக்கு விண்ணப்பிக்கும் போது, சான்று வழங்குவதற்கு முன்பு, அந்த நிறுவனத்தின் கட்டிடத்தை ஆய்வு செய்து, தரநிலைகளைப் பார்த்த பிறகே தீ விபத்து குறித்த தடையில்லா சான்று வழங்கப்படுகிறது. அவ்வாறு தடையில்லா சான்று இல்லாமல் இயங்கக்கூடிய எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், அதற்கு சீல் வைக்க டெல்லி மாநகராட்சிக்கு உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதனைத் தவிர்த்து, விதிகளின்படி குழந்தைகள் நல மருத்துவர்கள், நியோனாட்டாலஜி (Neonatology) நிபுணர்கள், சிறப்பு மருத்துவர்கள் ஆகியோரே குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும். ஆனால், தீ விபத்து நடந்த குழந்தை பராமரிப்பு மையத்தில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பணியமர்த்தப்பட்டவர் இளங்கலை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (MBBS) மற்றும் இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் (BAMS) பயின்றவர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:டெல்லி - வாரணாசி இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!