டெல்லி:7வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன்.1) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிட்டுள்ளார். அதேபோல் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட்டுள்ளார்.
பீகார், சண்டிகர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு ஹர்மிர்பூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.
அதேபோல் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பாஜக தலைவர் ஜெய்ராம் தாகூர் தனது வாக்கினை செலுத்தினார். மேற்கு வங்கம் மாநிலம் டைமண்ட் ஹார்பர் தொகுதியில் களம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் பானர்ஜி தனது வாக்கினை செலுத்தினார்.
அதேநேரம் தெற்கு 24 பர்கானஸ் பகுதியில் இவிம் இயந்திரங்கள் திருடப்பட்ட நிலையில், இரண்டு விவிபாட் இயந்திரங்கள் குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவிஎம் இயந்திரங்களை திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெனிமாதவ்பூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டு இருந்த இவிம் இயந்திரங்கள், விவிபாட் கருவிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று அருகில் உள்ள குளத்தில் வீசிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு புதிதாக இவிஎம் இயந்திரங்கள் மற்றும் விவிபாட் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:குளத்தில் வீசப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு! - Voting Machine Was Thrown