டெல்லி:சட்டப் பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
2022-ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு டெல்லியில் ஆட்சியில் இருந்தது. அப்போது மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கியதில் சுமார் ரூ.2800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து டெல்லி போலீசார், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், இருவரும் உச்சநீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதை நிரூபிக்கும் வரையில் முதல்வர் பதவி வகிக்க மாட்டேன் என்று கூறி, முதலமைச்சர் பதவியை அதிஷியிடம் வழங்கினார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த சூழலில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி டெல்லியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அமலாக்கத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கெனவே, கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர துணை நிலை ஆளுநர் அனுமதி அளித்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகமும் அனுமதி வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.