டெல்லி: கடந்த 45 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் கொலையை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகின்றனர். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று மாநிலங்களவையில் மதிமுக எம்பி வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து மதிமுக பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான வைகோ இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி கைது செய்து வருகிறது. இன்றைக்கும் கூட 22 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்வதை இலங்கைக் கடற்படை பொழுதுபோக்காக செய்து வருகிறது.
கடந்த 45 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையாலும், கடற்படை ஆணையினைச் செயல்படுத்தும் சிங்கள மீனவர்களாலும் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது. இலங்கை கடற்படையினரால் இவ்வளவு துயரங்களுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் ஆளாகிறார்கள் என்றால் அவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் இந்திய குடிமக்களாக இந்த நாடு கருதுமேயானால் இந்த கொடுமைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது நமது இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர், தமிழ்நாட்டு மீனவர்களிடம் இன்றைய போட்டியில் இலங்கை தோற்றுவிட்டால் உங்கள் தலைகளை வெட்டுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர். அந்தப் போட்டியில் இலங்கை தோற்று, இந்தியா வெற்றி பெற்றது. அன்றே, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கொலை செய்தது.