சித்ரதுர்கா:மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்தின் 122வது கிளை கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில் இன்று திறக்கப்பட்டது. புதிய கிளையை திறந்து வைத்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண், நான்கு மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் தங்களது நிறுவனத்தின் மற்றொரு மைல்கல் இது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
புதிய கிளை திறப்பு விழாவுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கடந்த 1962 இல், நமது நிறுவன தலைவர் ராமோஜி ராவ் அவர்களால் மார்கதர்சி சிட் ஃபண்ட் தொடங்கப்பட்டது. இன்று நான்கு மாநிலங்களில் நிறுவனத்தின் கிளைகள் பரந்துவிரிந்துள்ளன. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மொத்தம் 121 கிளைகளுடன் நிறுவனம் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்று 122வது புதிய கிளை சித்ரதுர்காவில் உதயமாகி உள்ளது. இது, கர்நாடகா மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள 26வது கிளையாகும். அடுத்த ஓராண்டுக்குள் கர்நாடகாவில் மேலும் ஐந்து முதல் ஆறு கிளைகளை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது." என்று சைலஜா கிரண் கூறினார்.
நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள் குறித்து அவர் கூறும்போது," நடப்பு நிதியாண்டில் மார்கதர்சி சிட்ஸ் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்து சாதித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் இதனை 13 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.5 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ருபாய் வரை பல்வேறு நிதி சேமிப்புத் திட்டங்களை, மொத்தம் 2.5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் அளித்து வருகிறோம்" என்றார் அவர்.
மேலும் அவர் கூறும்போது,"விவசாயிகள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர்கள், தகவல்தொழில்நுட்ப பணியாளர்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் நம்பிக்கையை பெற்றுள்ள மார்கதர்சி சிட் ஃபண்ட், அவர்களுக்கு சிறப்பான நிதி சேவையை வழங்கி வருகிறது. பல்வேறு தரப்பைச் சேர்ந்த குடும்பத்தினருக்கும் தலைமுறை தலைமுறையாக எங்கள் சேவை தொடர்கிறது." என்று சைலஜா கிரண் பெருமிதத்துடன் கூறினார்.