ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராடிசன் ஹோட்டலில், போதை பார்ட்டி நடத்தப்பட்ட வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது. இது சம்பந்தமாக ஹைதராபாத் கச்சிபவுலி போலீசார் கடந்த செவ்வாயன்று, சையத் அப்பாஸ் அலி ஜாஃப்ரி என்பவரை கைது செய்தனர். இவர் கஜ்ஜாலா விவேகானந்திற்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வருகிறார்.
போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே கஜ்ஜாலா மற்றும் அவரது ஓட்டுநர் பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பாஸ், கஜ்ஜாலாவின் ஓட்டுநர் பிரவீன் மூலமாக பல்வேறு வகையில் போதைப்பொருள் விநியோகித்து வருகிறார். போலீஸ் விசாரணையின் போது பிரவீன், அப்பாஸ் இடையே நடைபெற்ற பணப் பரிமாற்றத்தை கண்டுபிடித்தனர்.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வழக்கு புதிய திருப்பத்தைக் கொண்டுள்ளது. இந்த போதை பார்ட்டியில் மணிகர்ணிகா பட இயக்குநர் கிரிஷ் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணைக்கு வர வேண்டும் என கிரிஷ்ஷுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இயக்குநர் கிரிஷ் வரும் வெள்ளியன்று விசாரணைக்கு வருவதாக சம்மனுக்கு பதிலளித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் போலீசார் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றனர். கஜ்ஜாலாவின் போதை பார்ட்டிக்கு பல சினிமா பிரபலங்கள் வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, ராடிசன் ஹோட்டலில் உள்ள 200 சிசிடிவி கேமராக்களில் 20 மட்டுமே செயல்படுகிறது எனவும், இது வழக்கு விசாரணைக்கு சவாலாக அமைந்துள்ளது என போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:"கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத்"? - பாஜக குற்றச்சாட்டு என்ன? தடயவியல் சோதனை!